Friday, April 17, 2020


கவிஞர் வே.சிவக்கொழுந்து




பருத்தித்துறை வியாபாரி மூலையில் நாச்சிமார் கோயிலுக்கு அருகில் உள்ள வேதர் வளவில். 2.9.1908 இல் வேல்மயில் வாகனன் , கற்பகம் தம்பதியினருக்கும் மகனாகப் பிறந்தார் தமது குடும்ப சூழ்நிலை காரணமாக மிக இளம் வயதினில் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து உழைத்ததன் மூலம் பெற்றுக்கொண்ட வருமானத்தை தாயின் கையில் கொடுத்து குடும்ப பாரத்தைச் சுமந்து பங்களித்தார். மேலைப் புலோலி சைவப்பிரகாச வித்தியாலத்தில் கல்வி பயின்றுள்ளார். ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் படித்துக்கொண்டிருக்கும் போதே முதலாம் வகுப்பு தொடக்கம் பத்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு என் கணிதம், அட்சர கணிதம், கேத்திர கணிதம் ,பூமி சாஸ்திரம், சுற்றாடல் முதலான பாடங்களுக்கு உரிய நூல்களை அரச பாடங்களுக்கு ஏற்ப ஆக்கி அரச அங்கீகாரத்துடன் வெளியிட்டார் என்பதும் அக்கால மாணவர்கள் பரிட்சையில் சிறந்த பெறுபேறு பெற உதவின என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தனது வெளியீடுகளுக்கு ஒத்தாசையாக இருக்குமென எண்ணியதன் காரணமாக "கலாபவனம்" என்றதொரு அச்சகத்தை நடாத்தி வந்திருக்கின்றார்.
வடலங்கா புத்தகசாலை வெளியீடுகளாக வெளியீடுகளைச் செய்திருக்கிறார். 1938 இல் தம்பிப்பிள்ளை அவர்களது இளைய மகள் நவமணியைத் திருமணம்  செய்ததன் பயனாக நான்கு பெண் பிள்ளைகளையும் ஒரு ஆண் குழந்தையும் பெற்றார். அம்பிகையின் திருநாமங்களை பெண் குழந்தைகளுக்கும் கண்ணன் மீதான பக்தியால் மகனுக்கு கண்ணன் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். இன்றும் இவரது பிள்ளைகள் வியாபாரி மூலையில் வாழ்ந்து வருகின்றனர். பெண் பிள்ளைகளில் ஜெகதீஸ்வரியும், பவானியும் அமரத்துவம் அடைந்துவிட்டனர். மங்களேஸ்வரி மற்றும் சிவதேவியும் வாழ்ந்து வருகின்றனர். சிவ தேவி இவரது ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்து வருகின்றார். கவிதை துறையைப் பொறுத்தவரையில் இவரது மாலைக்கு மாலை,   கவிதைக் கன்னி, முல்லைக் காடு, பாலர் கீதம், கண்ணன் பாட்டு ஆகியவை தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் பல குழந்தை கவிதைகளும் இவர் படைத்துள்ளார். இவற்றுள் பல பாடநூல்களிலும் வெளிவந்துள்ளன. இவர் இறுதியாக வெளியிட்ட "ஜீவ யாத்திரை" எனும் நாவல் இவரது உரைநடை திறனை கண்டுகொள்ள உரைகல்லாக விளங்குகின்றது. இதனை பாரதியாரின் பேத்தி திருமதி விஜயபாரதி சுந்தரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவரது இலக்கியப் பணியை யாழ் இலக்கிய வட்டம் போற்றிக் கௌரவித்துள்ளது. அதனைவிட கி.வா. ஜெகநாதன், பேராசிரியர் ஐயன் பெருமாள் கோன், டி.கே.சி, நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை போன்ற தமிழறிஞர்களும் போற்றியுள்ளனர். சமஸ்கிரத காவியம் கொன்றை தமிழ் மரபோடு ஒட்டி புதிதாகப் பாடி நூல் உருவாக்கம் செய்யது கொண்டிருக்கும்போது அப்பணி நிறைவேறாமல் 10.05.1968 ல் இறைவனடி சேர்ந்தார். அவரது நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட வேண்டியதும் படைப்புகள்தொகு படவேண்டியதும் காலத்தின் கடமையாய் எம் முன் விரிந்து கிடக்கின்றது.
இவரது சிறந்த குழந்தைக் கவிதைகளாக ,
ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி . . . . . . . . . . . .
நண்டின் காலை ஒடிக்காதே . . . . . .
அன்னையே தந்தையே நமஸ்காரம் . . .
அம்புலி அம்புலி வா வாவா . . .
பூக்கள் பறிப்போம் .
வட்ட வட்டப் பூக்கய் . . . .
பட்டம் ஒன்று பறக்குது பார் . . . .
போன்றனவற்றைக் குறிப்பிடலாம் . இவ்விடயத்தில் இவரைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் , ஆக்கங்கள் என்பவற்றை தந்துதவிய அன்னாரின் மகளாகிய சிவதேவிக்கும் , பருத்தித்துறை பிரதேச செயலக செம்பருத்தி மலரில் இவரைப் பற்றி எழுதியிருந்த கொற்றை பி . கிருஷ்ணானந்தன் அவர்களது கட்டுரைக்கும் நன்றிகள் . இவ்வரலாற்று குறிப்பைத் தொடர்ந்து இவரது குழந்தைப்பாடல்கள் சில இங்கே தரப்படுகின்றன .

ஆட்டுக்குட்டி
ஆட்டுக் குட்டி எந்தன் குட்டி
          அருமையான சின்னக்குட்டி
ஓட்டமோடி வந்திடுவாய்
           உனக்கு முத்தம் தந்திடுவேன்

துள்ளித் துள்ளிப் பாய்ந்திடுவாய்
          சுவரிலேறிக் குதித்திடுவாய்
கள்ளன் கொண்டு போய் விடுவான்
         கட்டியுன்னை வைத்திடுவான்

 வீடு விட்டுப் போய்விடதே
                  வெளியே பூதம் காத்து நிற்கும்
சோடுனக்கு நானல்லவோ
                துள்ளியிங்கு வந்திடுவாய்

அம்புலி வா

அம்புலி அம்புலி வாவாவா
அழகிய சொக்கா வா வா வா

உயர ஏனோ நிற்கின்றாய்
ஓடி இங்கு வருவாயே

கோயில் குளங்கள் போய் வருவோம்
கும்பிட்டே நாம் வரப் பெறுவோம்

நல்லமிட்டாய் உனக்கிரண்டு
நயந்து நானும் தந்திடுவேன்

என்னோடு நித்தம் இருந்திடுவாய் எ
னக்கொரு முத்தம் தந்திடுவாய்

எனது பட்டம்

பட்டம் ஒன்று பறக்குது பார்
       பனையின் உயர நிற்குதுபார்
வெட்ட வெளியில் விந்தையுடன்
      விளையாட்டுக்கள் புரியுது பார்

குத்துக் கறணஞ் சிலபோடும்
      குதித்துக் கிளம்பி வானேறும்
பத்து முழத்துப் பாம்பெனவே
      பாங்குடன் நின்றும் அசைந்தாடும்

தம்பி வந்து பட்டம் பார்
      தாவிக் குதிக்கும் அதுவே பார்
நம்பி உனது கையினிலே
      நானுங் கயிற்றைத் தரமாட்டேன்

ஐயோ ! எனது பட்டமெங்கே
     அறுத்துக் கொண்டே ஓடுதடா
கையோ டிங்கு சில முழத்துக்
     கயிறு தானே காணுதடா .

ஜீவ இரக்கம்

நண்டின் காலை ஒடிக்காதே
     நாயைக் கல்லாலடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
    வாயில் பிராணியை வதைக்காதே

கோழிக்குஞ்சைத் திருகாதே
    குருவிக் கூண்டைச் சருவாதே
 ஆழி சூழும் உலகேத்தும்
     அன்பு காட்டி வதிவாயே .

ஊனைத் தின்று வாழாதே
     உயிரைக் கொன்று தாழாதே
மானைக் கொன்றால் மான் கன்று
    வருந்தல் நீயும் அறிவாயோ ?

கிளியைக் கூண்டில் அடைக்காதே
    கேடுனை வந்து சூழ்ந்திடுமே .
ஒளியே யில்லாச் சிறைதனிலே
    உன்னை வைத்தாற் சகிப்பாயோ ?

எல்லா உயிரும் இறைமகவே
     இன்பம் நாடி உழைப்பனவே
பொல்லாப் பொன்றுஞ் செய்யாதே
     புனித வாழ்வு காண்பாயே .


கவிஞர் வே.சிவக்கொழுந்து பருத்தித்துறை வியாபாரி மூலையில் நாச்சிமார் கோயிலுக்கு அருகில் உள்ள வேதர் வளவில் . 2.9.1908 இல் வேல்...