Wednesday, December 22, 2010

ஜீவ இரக்கம் கவிஞர் யாழ்ப்பாணன் பாடல்

நண்டின் காலை ஒடிக்காதே
நாயைக் கல்லால் அடிக்காதே
வண்டைப் பிடித்து வருத்தாதே
வாயில் பிராணியை வதைக்காதே

கோழிக் குஞ்சைத் திருகாதே
குருவிக் கூண்டைச் சருவாதே
ஆழி சூழுலம் உலகேத்தும்
அன்பு காட்டி வதிவாயே.

ஊனைத் தின்று வாழாதே
உயிரைக் கொன்று தாழாதே
மானைக் கொன்றால் மான் கன்று
வருந்தல் நீயும் அறிவாயோ?

கிளியைக் கூண்டில் அடைக்காதே
கேடுனை வந்து சூழ்ந்திடுமே
ஒளியே யில்லாச் சிறைதனிலே
உன்னை வைத்தாற் சகிப்பாயோ?

எல்லா உயிரும் இறைமகவே
இன்பம் நாடி உழைப்பனவே
பொல்லாப் பொன்றும் செய்யாதே
புனித வாழ்வு காண்பாயே.

இந்த இனிய பாடல் பாடலைப் பாடியவர் கவிஞர் யாழ்ப்பாணன். எனது பிறந்த ஊரான வியாபாரிமூலைச் சார்ந்தவர். இந்த கவிதை அவரது கவிதை நூலான 'மாலைக்கு மாலை' யிலிருந்து எடுக்கப்ட்டது. 1948 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.



இதற்கு முன்னுரை வழங்கியது இலங்கைப் பல்கலைப் கழகப் பேராசிரியரான க.கணவதிப்பிள்ளை ஆகும்.

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் வாழ்த்துரை வழங்கியிருந்தார் என்பது குறிப்படத் தக்கது.

திரு.வே.சிவக்கொழுந்து (கவிஞர் யாழ்ப்பாணன்)

பருத்தித்துறை வியாபாரிமூலைச் சார்ந்த அறிஞர்களி் ஒருவர் திரு.வே.சிவக்கொழுந்து. கவிஞர் யாழ்ப்பாணன் என்ற பெயரில் இவரது புகழ் தமிழ் கூறும் உலகெங்கும் பரவியிருந்தது.

திரு.வே.சிவக்கொழுந்து (யாழ்ப்பாணன்)


  • மாலைக்கு மாலை, 



    • முல்லைக் காடு,  



      • கவிதைக் கன்னி 



        • பாலர் பாடல்கள்

ஆகியன இவரது கவிதை நூல்களாகும்.



  • ஜீவ யாத்திரை  இவரது நாவலாகும்

இவை தவிர பூமிசாத்திரம், மனக்கணிதம் போன்ற பல பாட நூல்களையும் இயற்றி அன்றைய  மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும் தொண்டாற்றினார். 

அக்காலத்தில் வடமாகாண மாணவர்கள் கணிதத்தில் மிகவும் முன்னணியில் திகழ்ந்ததற்கு இவரது மனக் கணித நூல்கள் காரணமாக இருந்தன என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

இவர் ஆரம்பித்து நடாத்தி வந்த 'வடலங்கா புத்கசாலை' அன்று எமது வாசிப்புத் தீனிக்கு அன்றைய காலகட்டத்தில் தீனி போட்டதை மறக்க முடியாது. 

அதே போல அவரது கலாபவனம் அச்சகமும் அன்றைய காலகட்டத்தில் ஆற்றிய அச்சக சேவை மிகவும் பிரபலமானது.

மாலைக்கு மாலை என்ற இந்த நூலானது நூலகம் இலங்கை நூல்களை இணையத்தில் தரும் தளமான நூலகத்தில் கிடைக்கிறது. 

http://www.noolaham.org


1 comment:

  1. அன்பின் ஒழியாகி அறிவின் சிகரமாகி பண்பின் சின்னமாகி பணிவின் உருவாகி இருள் போக்கி இன்பமும் அருளும் சேர பொருளும் கல்வியும் புகட்டி புரிதளும் வளிகாட்ட கருணையுடன் தோன்றிய குருவே வாழிய உன் நாமம் இவ்வுலகில் என்நாளும்!!!!!!

    ReplyDelete

கவிஞர் வே.சிவக்கொழுந்து பருத்தித்துறை வியாபாரி மூலையில் நாச்சிமார் கோயிலுக்கு அருகில் உள்ள வேதர் வளவில் . 2.9.1908 இல் வேல்...